உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலி மின்வாரியம் அலட்சியம் என புகார்

மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலி மின்வாரியம் அலட்சியம் என புகார்

வானுார்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த புளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் சாலையையொட்டி தன் நிலத்தில் சவுக்கு சாகுபடி செய்துள்ளார். நிலத்தில் கால்நடைகள் புகுவதை தடுக்க சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றுடன் பெய்த கனமழையில், சேகர் நிலத்தின் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, கம்பி வேலி மீது விழுந்து, மின்சாரம் துண்டித்துள்ளது.நேற்று மதியம், புளிச்சப்பள்ளம் கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வீரம்மாள், 50, அவரது நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தார். பிற்பகல், 3:30 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த சத்தியவாணி, 60, மாடுகளுக்கு புல் அறுக்க சென்றார்.அப்போது, திடீரென மின்சாரம் வந்ததோடு, அறுந்து கிடந்த மின் கம்பி வாயிலாக சேகர் வயலில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி முழுதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த வேலியை பிடித்த சத்தியவாணி மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்ட வீரம்மாள், ஓடிச் சென்று சத்தியவாணியை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.வானுார் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அங்கு கூடிய பொதுமக்கள், 'நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய பெய்த மழையால் மின்கம்பி அறுந்துள்ளது. இது குறித்து, மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது யாரும் அழைப்பை எடுக்கவில்லை. அலட்சியமாக இருந்தது மட்டுமல்லாமல் சீரமைக்காமல் மின் இணைப்பு வழங்கியதால், இருவரும் இறந்துள்ளனர். இறந்த பெண்களின் குடும்பத்திற்கும் மின் வாரியம் நிவாரணம் வழங்க வேண்டும்' எனக்கூறி, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தனர்.வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று, நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து, இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ