| ADDED : ஜூலை 08, 2024 04:58 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தரமற்ற செம்மண் சாலை போடப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட விராட்டிக்குப்பம் பாதை கிராமத்தில் உள்ள விநாயகா நகர் மற்றும் செல்வசீமான் நகரில் விராட்டிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சில தினங்களுக்கு முன் புதிதாக செம்மண் சாலை போடப்பட்டது. சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக செம்மண் சாலை முற்றிலுமாக சேதமாகி, சேறும், சகதியாக உள்ளது.இதனால், அந்த பகுதி மக்கள் வாகனங்களிலும், நடந்தும் கூட வரமுடியாமல் தவிக்கின்றனர். தரமற்ற சாலை போடப்பட்டதை கண்டித்தும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் விநாயகா நகர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9:15 மணிக்கு, விழுப்புரம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கலெக்டரிடம் மனு கொடுத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர்.அதனையேற்று, பொதுமக்கள் 10:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.