உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளவனூர் அருகே வீடுகளில் துணிகர திருட்டு

வளவனூர் அருகே வீடுகளில் துணிகர திருட்டு

விழுப்புரம்: வளவனூர் அருகே வீட்டின் கதவை திறந்து, தூங்கியவர்களின் அறையை பூட்டிவிட்டு மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 59; இவர், அதே பகுதி மெயின் ரோடில் எலக்ட்ரிகல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வந்து, வீட்டில் குடும்பத்தோடு படுத்து தூங்கினார். அதிகாலை 3:00 மணிக்கு வந்த மர்ம நபர்கள், அவது வீட்டின் பின் பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து திறந்துள்ளனர். அப்போது, அறையின் உள்ளே தூங்கியிருந்த ஏழுமலை உள்ளிட்டோர் வெளியே வராதபடி, தாழ்ப்பாள் போட்டு மூடிவிட்டு, பக்கத்து அறையில் பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து, ஏழுமலை குடும்பத்தினர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர்கள் படுத்திருந்த அறையின் கதவு மூடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு பக்கத்து வீட்டுக்கு போன் செய்து அழைத்து, கதவை திறந்து பார்த்தபோது, வீட்டில் திருட்டு போனது தெரிய வந்தது.இதே போல், அதே பகுதியை சேர்ந்த விவசாயி தேவநாதன், 36; என்பவர், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்தும், பீரோவை உடைத்தும் மர்ம நபர்கள் திருட பார்த்துள்ளனர். அதில் நகை பணம் இல்லாததால், அங்கிருந்த சில பொருட்களை மட்டும் திருடிச்சென்றுள்னனர். இது குறித்த புகார்களின் பேரில், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை சென்று, இரண்டு வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ