பண்ருட்டி, : நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, தி.மு.க., நகர செயலாளர் உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பண்ருட்டி அடுத்த ஒறையூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது சித்தப்பா செல்வராஜ் என்பவருக்கும் இடையே நிலபிரச்னை உள்ளது.இது தொடர்பாக, நேற்று காலை 7:45 மணிக்கு செல்வராஜ், அவரது சம்பந்தியான தொரப்பாடி தி.மு.க., நகர செயலாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட உறவினர்கள், ஒறையூரில் போலீஸ்காரர் கார்த்திகேயனிடம் நியாயம் கேட்டனர்.அப்போது தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அதில், போலீஸ்காரர் கார்த்திகேயன், அவரது மனைவி பேபிஷாலினி, ஆனந்தன் மனைவி ஜெயலட்சுமி,34; ஆகிய மூவர் காயமடைந்தனர். எதிர்தரப்பில் திருத்துறையூர் சுகுதேவ்,27; ராஜ்குமார்,30; ஒறையூர் ராம்குமார் மனைவி தேவிகா,34; ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரில், தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க., செயலாளர் சுந்தரவடிவேல், அவரது மகன் ராஜ்குமார்,30; சுகுதேவ்,27; ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் மீதும், ஒறையூர் செல்வராஜ் மனைவி ராஜலட்சுமி,58; கொடுத்த புகாரின்பேரில்், போலீஸ்காரர் கார்த்திகேயன், அவரது தாய் கண்ணம்மாள் , மனைவி பேபிஷாலினி, கலா,ரவி,இளங்கோ உள்ளிட்ட 8 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.