| ADDED : ஜூன் 05, 2024 11:02 PM
மரக்காணம்: மரக்காணம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்துள்ளது. விவசாயிகள் நிலத்தில் கோடை உழவு மேற்கொண்டு வருகின்றனர். பல கிராமங்களில் நிலத்தடி நீர் இருப்பினை பயன்படுத்தி நெல், மணிலா, எள், உளுந்து ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் மரக்காணம் வட்டாரத்திற்கு உட்பட்ட எலவலப்பாக்கம் கிராமத்தில் கம்பு கோ - 10 ஆதார விதைப்பண்ணை வயல்கள், ஓமந்துார் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ், அசோலா உற்பத்தி செயல் விளக்க தளைகள், தென் நெற்குணம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்டுப் பன்றியினை விரட்டும் செயல் விளக்க தளைகளை பார்வையிட்டார்.பின் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு இந்த வருடம் செயல்படுத்த உள்ள அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகளை முன்கூட்டியே தெர்வு செய்திடவும், கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து தொழில்நுட்ப செய்திகளை வழங்கிடவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்ம ராஜ், உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, உதவி தொழில் நுட்ப மேலாளர் அய்யனார் ஆகியோர் உடன் இருந்தனர்.