| ADDED : ஜூன் 02, 2024 05:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், தடையின்றி மின்சாரம் வழங்குவதை மின்வாரிய அலுவலர்கள் உறுதி செய்யுமாறு, கலெக்டர் வலியுறுத்தினார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய கலெக்டர் பழனி பேசியதாவது:ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், செய்தியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், விழுப்புரம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேவையான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் அமைக்க வேண்டும். போதுமான துாய்மைப் பணியாளர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். குடிநீர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை துவங்கி, நிறைவடையும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை, மின்வாரியத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மருத்துவக் குழு, மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.மையத்தில் தேவையான தொழில்நுட்ப மற்றும் இணையதள வசதி, தரைவழித் தொலைபேசி வசதியை ஏற்படுத்த வேண்டும். ஊடக மையத்தில், செய்தியாளர்களுக்குத் தேவையான இருக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். ஊடக அறைக்குத் தேவையான தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள், இணையதள வசதிகள் குறித்து முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.