விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தலன்று ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும், தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு, கணினி குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், வரும் ஏப்.19ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு, கணினி குலுக்கல் முறையில், நேற்று காலை பணியிடம் ஒதுக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ்குமார்மிஷ்ரா முன்னிலையில் இப்பணிகள் நடந்தது.கலெக்டர் பழனி கூறியதாவது: செஞ்சி தொகுதியில் 365 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் தலா 365 பேர் வீதம், 3 நிலை- அலுவலர்களும், என மொத்தம் 1,460 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், மயிலம் தொகுதியில் தலா 320 பேர் வீதம், தலைமை அலுவலர்கள், 3 நிலை அலுவலர்கள் என 1,280 பேரும், இதே போல், திண்டிவனம் (தனி) தொகுதியில் மொத்தம் 1,280 பேரும், வானூர் (தனி) தொகுதியில் மொத்தம் 1336 பேரும், விழுப்புரம் தொகுதியில் 1,388 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் 1320 பேரும், திருக்கோவிலூர் தொகுதியில் 1372 பேரும் என மொத்தமுள்ள 1,966 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, தலா 2,359 வீதம் தலைமை அலுவலர்கள், வாக்குப்புதி நிலை அலுவலர்கள் 3 பேரும் என ஒட்டு மொத்தமாக 9,436 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். டி.ஆர்.ஓ.,க்கள் பரமேஸ்வரி, சரஸ்வதி, தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் உடனிருந்தனர்.