| ADDED : ஆக 05, 2024 12:38 AM
திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் நேற்று முன்தினம் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் கால விஷ்ணு சிற்பம் உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. செங்குட்டுவன் கூறியதாவது:தடுத்தாட்கொண்டூர் கிராமம் வீரப்பன்மேடு எனும் பகுதியில் 5 அடி உயர விஷ்ணு சிற்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரை யுடனும், இடது கரம் இடுப்பில் வைத்த நிலையிலும் காணப்படுகிறது. பின்னிரு கரங்கள் பிரத்யேக சக்கரம், சங்கு ஆகியவற்றை ஏந்தியுள்ளன.இந்த சிற்பம் பிற்கால பல்லவர் காலத்தை - கி.பி., 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. இதை, சென்னையை சேர்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். 1,000 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் விஷ்ணு கோவில் இருந்து மறைந்திருக்க வேண்டும். கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை பிடாரி அம்மன் கோவிலில் சப்த மாதர் சிற்பங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.