| ADDED : மே 09, 2024 02:37 AM
மரக்காணம்:விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் ஜமீத் நகரைச் சேர்ந்தவர் முகமது பாரூக், 55. இவரது மனைவி வகிதாபானு; கோட்டக்குப்பம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர். சுயேச்சையாக வெற்றி பெற்ற இவர், தி.மு.க.,வில் இணைந்தார்.ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த முகமது பாரூக், சமீப காலமாக கடன் பிரச்னையில் சிக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவரது வீட்டின் அருகே உள்ள சின்னக்கோட்டக்குப்பம் தனியார் பண்ணை வீட்டில் இரு நாட்களாக தங்கி இருந்தார்.அப்போது அவரை சிலர் சந்தித்து பேசினர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் முகமது பாரூக் அறை கதவு திறக்காமல் இருந்தது. சந்தேகமடைந்த பார்ம் ஹவுஸ் ஊழியர் அறையை திறந்து பார்த்தபோது கட்டிலில் மர்மமான முறையில் முகமது பாரூக் இறந்து கிடந்தார்.கோட்டக்குப்பம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து, அவர், கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.முகமது பாரூக் தங்கி இருந்த அறைக்கு யார், யார் வந்து சென்றனர் என, பார்ம் ஹவுஸ் கேமரா பதிவுகளை கைப்பற்றி, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.