| ADDED : மே 28, 2024 11:35 PM
விழுப்புரம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான அரசு கலை கல்லுாரியில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து மூன்றடுக்கு பாதுகாப்பில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இங்குள்ள பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வழிகள், ஓட்டு எண்ணும் பகுதியில் முகவர்கள் அமரும் இருக்கை வசதிகள், குடிநீர், மின்விசிறி, ஒலிபெருக்கி, தடையில்லா மின்சார வசதி உட்பட அனைத்து முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார். எஸ்.பி., தீபக்சிவாச், வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல்அமீது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் பரிதி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.