| ADDED : ஜூன் 25, 2024 07:13 AM
விழுப்புரம், : கண்டமங்கலம் அருகே பம்பை ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இது குறித்து, பெரியபாபுசமுத்திரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் தலைமையிலான விவசாயிகள், நேற்று அளித்த மனு விபரம்:நாங்கள் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள். எங்கள் கிராமம் வழியாகச் செல்லும் பம்பை ஆறு வாய்க்கால் பகுதியில், அதன் கரையோரம் ஒட்டியுள்ள ஆற்றங்கரையை ஆக்கிரமித்து சிலர், அந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஆற்றில் மணல் கடத்தி வருகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த சிலர், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து, பொது பாதையை ஆக்கிரமித்து, பம்பை ஆற்றங்கரையோரம் ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் மூலம் மணல் எடுத்து, இயற்கை வளத்தை திருடிச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து வருகிறது.இது தொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீர் ஆதாரமாக விளங்கும் பம்பை ஆற்றங்கரையில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.