| ADDED : மே 01, 2024 01:10 AM
விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே பெண் இன்ஜினியரிடம் ஆன்லைன் மூலம் 49 ஆயிரத்து 907 ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்னர்.விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்குராஜா மகள் திவ்யா, 24; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், கடந்த 2022ம் ஆண்டு தனியார் வங்கியில் வழங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார்.அதே ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி மர்ம நபர் ஒருவர், திவ்யாவை மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். கார்டு வழங்கிய வங்கியின் ஆப்பை ஓபன் செய்து அதில், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., எண்களை சேர்க்கும்படி கூறியுள்ளார்.இதை நம்பி அந்த வங்கி ஆப்பில் சென்ற திவ்யா, மர்ம நபர் கூறியதை செய்தவுடன், வங்கி கணக்கிலிருந்து 49 ஆயிரத்து 907 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.இதுகுறித்து திவ்யா நேற்று விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.