உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசுப் பள்ளி மாணவிகள் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

அரசுப் பள்ளி மாணவிகள் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம் : விடுதியில் இடம் கிடைக்காததால் அரசுப் பள்ளி மாணவிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இந்திய குடியரசு கட்சி தலைவர் குமார் தலைமையில், திருவெண்ணெய்நல்லுார் பகுதி அரசுப் பள்ளி மாணவிகளை விடுதியில் சேர்த்து கொள்ளாததால், நேற்று காலை 11:30 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.அவர்கள் அளித்த மனு:திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட கள்ளுக்கடை மூலை பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில் 6, 9, பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ள பெற்றோர் இல்லாத மாணவிகள், உடல் ஊனமுற்றோர் மாணவிகள் என 12 பேர் படிக்கின்றோம்.மாணவிகள், இங்கேயே தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே உள்ள அரசு மாணவியர் விடுதியில் இடம் கிடைக்காமல் தவிக்கின்றோம். இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மன உளைச்சலில் உள்ளோம்.விடுதி நிர்வாகம், இடமில்லை என அலைக்கழிக்கின்றனர். பள்ளி நிர்வாகமோ, விடுதியில் இடம் கிடைத்தால் தான் பள்ளியில் சேர்க்க முடியும் என கூறுகின்றனர். இதனால் பள்ளி, விடுதி என இரண்டு இடங்களிலும் சேர முடியாமல் தவிக்கின்றோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, மாணவிகள், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்திலும் தர்ணா செய்தபின், கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ