| ADDED : ஆக 02, 2024 02:06 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த பிலாரிமேட்டில் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு மழைநீர் வடிகால் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.மரக்காணம் - திண்டிவனம் நான்கு வழிச்சாலை பணி மற்றும் முக்கிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.கடந்தாண்டு பெய்த கனமழையின் போது திண்டிவனம் - மரக்காணம் சாலையின் இருபுறத்திலும் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சி, பிலாரிமேடு கிராமத்திற்குள் மழைநீர் புகுந்தது.இதனால் கிராம தெருக்களில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. பருவ மழை துவங்க சில நாட்கள் உள்ளதால், பிலாரிமேட்டில் இருந்து 300 மீட்டர் துாரம் வரை மழை நீர்வடிகால் வாய்க்காலை நீட்டித்தர ஒப்பந்ததாரரிடம் கூறி நடவடிக்கை எடுக்க, செய்யுமாறு திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனனிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அர்ஜூனன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பருவமழை காலத்தில் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்காத வகையில் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.