| ADDED : ஜூலை 12, 2024 06:25 AM
செஞ்சி: செஞ்சி அருகே நான்கு புதிய கல்வெட்டுகளை அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். செஞ்சி அடுத்த ராஜம்புலியூர் கிராமத்தில் செஞ்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ் பேராசிரியர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சுதாகர், தனது துறை மாணவர்கள் முகில், பார்வதி, ராஜேஸ்வரி ஆகியோருடன் கள ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ராஜம்புலியூர் கிராம மலைகளில் உள்ள பாறைகளில் 3 கல்வெட்டுகளும், மலை அருகே உள்ள மண்டப துாணில் ஒரு கல்வெட்டும் இருப்பதை கண்டு பிடித்தனர். இது குறித்து சுதாகர் கூறியதாவது:இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாறையில் உள்ள வெட்டு காடவராயன் காலத்தைச் சேர்ந்த எழுத்தமைதியில் உள்ளன. இதில் உள்ள வரிகளில் 'இவ் ஏரி கடர் சூரியன்' என்று உள்ளது. இது ஏரியை வெட்டிய செய்தியாக இருக்கலாம். மற்றொரு பாறை கல்வெட்டு விஜயநகர அரசன் அரியாராய நாயக்கர் காலத்தியது.இக்கல்வெட்டில் அரியராயர் பெயருடன் தகவல்களை பதிவு செய்துள்ளனர். பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. மற்றொரு கல்வெட்டு திருவரங்கம் ரங்கநாத சுவாமிக்கு அச்சுதப்ப நாய்க்கர் திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. மண்டபத்தில் இருந்த தெலுங்கு கல்வெட்டு மண்டபத்தை செய்தளித்த பெயராக இருக்கலாம். இக்கல்வெட்டில் 'தளபு நாதராயம மல்ல மலையஞ்சி சாமர நவபாருஷம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் மூலம் இப்பகுதியில் விஜயநகர, செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி உறுதி செய்கிறது. கோவில் மண்டபங்கள் கட்டி திருப்பணி செய்த செய்தி இக்கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இப்பகுதியின் வரலாற்றில் இவை முக்கிய செய்தியாக உள்ளன. இதை தமிழக தொல்லியல் துறையினர் முறைப்படி ஆவணப்படுத்த வேண்டும்.இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.