திண்டிவனம்: விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லாததால் அ.தி.மு.க., நிர்வாகிகள் குஷியாகி இன்ப சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவையொட்டி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 7ம் கட்ட தேர்தல் அறிவிப்பின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இதன் காரணமாக எதிர்கட்சியான அ.தி.மு.க., விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களம் காணும் வகையில் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டது. முன்னாள் அமைச்சர் சண்முகம் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிக்கும், மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளை நியமித்தது. அந்த நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடி பகுதிகளுக்கு சென்று, வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, ஜாதி வாரியாக கணக்கெடுத்து, முன்னாள் அமைச்சரிடம் முறைப்படி கொடுத்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக இருந்தனர்.இந்நிலையில், 7ம் கட்ட லோக்சபா தேர்தல் அறிவிப்பில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தற்போது வெளியாக வாய்ப்பு இல்லை.இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகாததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு நியமிக்கப்பட்ட அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதற்கு காரணம், சமீபத்தில்தான் லோக்சபா தேர்தல் வேலையை செய்துவிட்டு, ஓய்ந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேலையை பார்க்க சொன்னதால், நிர்வாகிகள் பலர் கோடை வெயிலை தணிக்க சுற்றுலா மேற்கொள்ள இருந்ததையும் தள்ளி வைத்தனர்.தற்போது இடைத்தேர்தல் இல்லை என்பதால் அ.தி.மு.க.,நிர்வாகிகள் பலர் நிம்மதி பெருமுச்சு விட்டுள்ளனர். அத்துடன், பலர் கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச தளங்களுக்கு இன்ப சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர்.