| ADDED : ஜூலை 11, 2024 04:38 AM
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி தொகுதி கக்கனுாரில் ஓட்டுச்சாவடியை பார்வையிட சென்ற பா.ம.க., வேட்பாளரை போலீசார்தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுபதிவு நேற்று நடைபெற்றது.பா.ம.க., வேட்பாளர் அன்புமணி கக்கனுார் ஓட்டுச்சாவடி எண் 55 ஐ பார்வையிட தனது கட்சியினருடன் சென்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சேகர் என்பவர் வேட்பாளர் அன்புமணியை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசிய தாக கூறப்படுகிறது.இதில் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் அன்புமணி , சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மற்ற போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதே போன்று தொரவி கிராமத்தில் சாலையோரமாக பா.ம.க., நிர்வாகிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பா.ம.க., வக்கீல் பாலு உள்ளிட்ட கட்சியினரை கலைந்துபோக சொன்னதால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கு வந்த ஏ.டி.எஸ்.பி., திருமால், வக்கீல் பாலுவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.