உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் பிரச்னை தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

கோவில் பிரச்னை தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

விழுப்புரம்: கோவில் பிரச்னை குறித்து, காணை போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் முத்தால மாரியம்மன் கோவில் உள்ளது. கல்பட்டு, சிறுவாக்கூர் கிராம மக்கள் பொதுவாக நிர்வகித்து, வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் இக்கிராமங்களுக்கு பொதுவான ஏரியை குத்தகை விட்டு, அதில் கிடைக்கும் வருவாய் மூலம், கோவிலின் திருவிழாவை நடத்துவதும், மீதமுள்ள தொகையை இரண்டு கிராமங்களின் அடிப்படை தேவைக்காக பிரித்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கோவிலின் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கம்போல் திருவிழாவில் பங்கேற்பதற்காக, சிறுவாக்கூர் கிராமத்தினர் சென்றனர். அதில், (சிறுவாக்கூர் காலனி) ஒரு தரப்பை சேர்ந்த சிலர், இந்தாண்டு தர்மகர்த்தா பொறுப்பை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பிரச்னை எழுந்ததால், விரக்தியடைந்த சிறுவாக்கூரை சேர்ந்த ஒரு தரப்பினர், நேற்று காலை 10 மணிக்கு காணை காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது, மாரியம்மன் கோவில் பிரச்னை குறித்தும், வழிபாட்டுக்கு வரக்கூடாது என, மிரட்டல் விடுத்தவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.காணை சப் -இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி, இப்பிரச்னை குறித்து, இரு தரப்பினரையும் அழைத்து பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ