| ADDED : ஜூலை 06, 2024 05:15 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய அரசின் 3 சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக சுரக் ஷா, பாரதிய சாக்ஷிய அதி நியாயம் ஆகிய சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், கடந்த 1ம் தேதி முதல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, நேற்று காலை 11:00 மணிக்கு விழுப்புரம் கோர்ட் முன் வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் துணை தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கோதண்டபாணி, அருள்ராஜ், ராஜாராம் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.மத்திய அரசு திருத்தம் செய்து அமல்படுத்தியுள்ள, மூன்று வித புதிய சட்ட திருத்தங்களை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.இதனையடுத்து கோர்ட் வளாகம் எதிரில், 11:15 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. உடன், விழுப்புரம் தாலுகா போலீசார் அவர்களை 11:25 மணியளவில் கலைந்து போகச் செய்தனர்.