| ADDED : ஜூன் 02, 2024 05:17 AM
வானுார்: கிளியனுார் அருகே தொழிலாளியின் கவனத்தை திசை திருப்பி, ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த 2 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கிளியனுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் சிவராஜ், 43; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் திண்டிவனம் தீர்த்தக்குளம் அருகே உள்ள ஒரு வங்கியில் நகையை அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு தனது ஹூரோ பிளஷர் ஸ்கூட்டர் பெட்டியில் வைத்துக் கொண்டு கிளியனுார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.திண்டிவனம் - புதுச்சேரி புறவழிச்சாலையில், தென்கோடிப்பாக்கம் மேம்பாலத்தின் மேல் வந்தபோது, அவரை தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர், சிவராஜை நிறுத்தி, 'கீழே பணம் கொட்டிக் கிடக்கிறது, உங்களுடையதா என்று பாருங்கள்' என கூறியுள்ளனர்.உடன், சிவராஜ், தனது பைக்கில் சாவியை அப்படியே விட்டுவிட்டு, சாலையில் சிதறிக் கிடந்த 10, 20 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த ஆசாமிகள், சிவராஜியின் ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பித்தனர்.இது குறித்து சிவராஜ் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.