| ADDED : ஜூன் 29, 2024 06:05 AM
விழுப்புரம் : வங்கி ஊழியர் உள்ளிட்ட இருவரிடம் ரூ.3.27 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சுந்தரமூர்த்தி,30; கூட்டுறவு வங்கி ஊழியரான இவர், பழைய கார் வாங்க ஓ.எல்.எக்ஸ்., ஆப்பில் தேடினார்.அப்போது, சுந்தரமூர்த்தியை தொடர்பு கொண்ட மர்ம நபர், ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்விப்ட் கார், ரூ.2 லட்சத்துக்கு விற்பனைக்கு உள்ளதாக கூறினர். அந்த காரை சுந்தரமூர்த்தி, முன்பணம் மற்றும் டெலிவரி தொகைக்காக மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1.27,200யை செலுத்தினர். அதன்பிறகு மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் அப்துல்ஷபி, 48; இவரை கடந்தாண்டு மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரிடிட் கார்டின் தொகையை உயர்த்தி தருவதாக கூறினார். அதனை நம்பி அப்துல்ஷபி, மர்ம நபர் கேட்ட வங்கி மற்றும் கார்ட்டில் பின் நம்பர்களை ஆன்லைனில் பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2,01,529 தொகையை, 7 தவணைகளாக மர்ம நபர்கள் எடுத்து மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.