சார்- பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு விக்கிரவாண்டியில் ரூ.94 ஆயிரம் சிக்கியது
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பணம் 94,570 ரூபாயை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் பத்திர பதிவிற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த அலுவலகத்தில் லஞ்ச பண பரிமாற்றம் அதிகளவு நடைபெறுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மாலை 3.30 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு விழுப்புரம் (பொறுப்பு) டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையிலான குழுவினர் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து சோதனை செய்தனர்.சார் பதிவாளர் சூர்யா உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடம் இரவு 8.30 மணி வரை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்து, கணக்கில் வராத பணம் ரூபாய் 94 ஆயிரத்து 570ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.