| ADDED : ஜூன் 25, 2024 06:58 AM
விழுப்புரத்தில் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் ரயில் நிலையம் வெளிமாவட்ட, வெளிமாநிலங்களை சேர்ந்தச் பயணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து செல்லும் ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்கள் சோதனை இல்லாததால், பொதுமக்கள் பொருட்களை சுலபமாக கொண்டு செல்கின்றனர்.சுதந்திர தினம், குடியரசு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் வெடிகுண்டு புரளி போன்ற சூழல்களில் மட்டுமே விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீசாரின் சோதனை, பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருப்பது வழக்கம்.பிற நேரங்களில் இல்லாததால், அதனை பயன்படுத்தி வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலர், விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ரயில் நிலையத்தில் இறக்கி வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அவ்வளவாக சோதனை செய்வதில்லை. இதனை பயன்படுத்தி பலர், ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சாலை மார்க்கமாக வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றால், உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருப்பதை உணர்ந்து, மூட்டைகளை முதலில் ரயில் நிலைய பிளாட்பாரம் கடைசியில் ஓரமாக இறக்கி விட்டு, ரயில் வந்தவுடன், வேகமாக அதில் ஏற்றி ரயில்வே போலீசாரின் கண்களில் மண்ணை துாவிவிட்டு கடத்தி செல்கின்றனர்.இந்த நிலை தொடர்ந்தால் தற்போது ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போல, விரைவில் அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். போலீசார் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக்கினால் தான், இந்த கடத்தலை தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும்.-நமது நிருபர்-