| ADDED : மே 31, 2024 02:46 AM
செஞ்சி,: விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலம் பயன்பெற விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என கன்னிகா சாரிடபுள் டிரஸ்ட் நிர்வாகி ரமேஷ் பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. 310 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசு அறிவித்துள்ள தென்பெண்ணையாறு -பாலாறு இணைப்பு திட்டத்தில் முதல் கட்ட பணியாக நந்தன் கால்வாய் உள்ளது.இதே திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓலையாறு, துரிஞ்சலாறு. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வராக நதி, தொண்டியாறு ஆகியவற்றை இணைத்தால், நதி நீர் இணைப்பு திட்டமாக உயரும். இதுவரை நந்தன் கால்வாய் மூலம் பயன்பெற்று வரும் 36 ஏரிகள் என்ற நிலை மாறி மேலும் நுாற்றுக்கணக்கான ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். தற்போது தென்பெண்ணை ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் செஞ்சி - அனந்தபுரம் பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டத்திற்கு இதன் மூலம் குடிநீர் கிடைத்து விடும்.இந்திட்டத்தில் வீடூர் அணைக்கு ஆண்டு முழுதும் தண்ணீர் வரும். இத்திட்டம் காமராஜர் ஆட்சி காலத்தில் ஆலோசிக்கப்பட்டது.செஞ்சி, மேல்மலையனுார், திண்டிவனம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படும் குடிநீர் தேவைகளை இதன் மூலம் நிறைவு செய்யலாம். ஏரிகள் மூலம் பாசனம் செய்வதால் மின் தேவை பாதியாக குறையும்.எனவே தமிழக அரசு விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆறுகளை இணைக்கும் திட்டத்தை பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ரமேஷ்பாபு கூறினார்.