உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வழிகாட்டுதல் முகாம்களில் பங்கேற்கலாம் கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த 'உயர்வுக்கு படி' முகாம் விழுப்புரம், திண்டிவனம் கோட்டத்தில் நடக்கிறது.இது குறித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:முதல்வரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தோல்வியுற்ற அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உயர்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்காக தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், எதிர்கால கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அனைத்துத்துறை அலுவலர்களுடன், ஒவ்வொரு கோட்ட அளவில் உயர்வுக்குபடி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில், கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்வெழுதிய, எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு, தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கப்படும்.மேலும், உயர்கல்வி திறன் மேம்பாட்டு பயிற்சியில் 100 சதவீத சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு, உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கோட்டங்களில் நடைபெற உள்ளது.முதல் கட்டமாக, விழுப்புரம் கோட்டத்தில் 11ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. திண்டிவனம் கோட்டத்தில் முதல் கட்டமாக 14ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 25ம் தேதியும் நடத்தப்பட உள்ளது.அதனடிப்படையில், உயர்வுக்கு படி முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடம் பற்றியும் விவாதிக்கபட்டது.இதனால், மாவட்டத்தில் அனைத்து அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் அனைவரும், இந்த உயர்வுக்கு படி என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்களில் பங்குகொண்டு உயர்கல்வி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்த்து பயன்பெற்றிட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.