| ADDED : மே 28, 2024 11:32 PM
வானுார் : இரும்பை கிராமத்தில் தரிசு நில தொகுப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்யா வயல்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இரும்பை கிராமத்தில் தரிசு நில தொகுப்பில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த வயல்களை வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், வானுார் வட்டாரத்தில் 2021--22 ம் ஆண்டு முதல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்தில் நீண்ட காலமாக தரிசாக உள்ள நிலங்களை கண்டறிந்து, அந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதன் அடிப்படையில் 11 ஏக்கரில் 13 விவசாயிகள் அடங்கிய தரிசு நில தொகுப்பு உருவாக்கி வேளாண் துறை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தரப்பட்டது.இதில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த நீரினை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து கொய்யா தாய்வான் பிங்க் என்ற ரகத்தினை தேர்வு செய்து நடவு செய்தனர். தற்போது கொய்யா செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து காய்க்க துவங்கி உள்ளது. வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த கலைஞர் திட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தரிசாக கிடந்த எங்கள் நிலங்களை சாகுபடிக்கு மாற்றி எங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்தனர். மேலும் ஊடுபயிராக எள், உளுந்து மற்றும் மணிலா பயிர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு கூடுதல் வருமானம் பெற்றோம் என விவசாயி சரஸ்வதி கூறியதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் ரேவதி, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.