| ADDED : மே 03, 2024 05:36 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஆசிரியையிடம் தாலி செயினை பறித்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் சைலோமை சேர்ந்தவர் தமிழ்செல்வன் மனைவி ஜாக்குலின் மேரி,37; தனியார் பள்ளி ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார்.திருக்கோவிலுார் நான்கு முனை சந்திப்பு அருகே சென்றபோது, பைக்கில் வந்த இருவர் ஜாக்லின் மேரி கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி., மனோஜ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.இரவு 7:00 மணி அளவில் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், காணை அருகே சாலை ஓரம் சந்தேகிக்கும் வகையில் பைக் நின்ற பகுதியில் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 4:15 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், சோழகனுார் பாஸ்கரன் கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த எஸ்.புதுாரைச் சேர்ந்த அஞ்சாபுலி மகன் அருள்ஜோதி,23; விழுப்புரம் மாவட்டம் வானுாரை சேர்ந்த வரதராஜன் மகன் அபிமன்யு,23; என்பதும், இருவரும் ஆசிரியை ஜாக்குலின்மேரியிடம் தாலி செயினை பறித்ததை ஒப்புக் கொண்டனர்.அதன்பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஏழு சவரன் தாலி செயின் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.