உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் - நீட் மாதிரி நுழைவு தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர் - நீட் மாதிரி நுழைவு தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

விழுப்புரம், : 'தினமலர்' நாளிதழ், டைம் நிறுவனத்துடன் இணைந்து, விழுப்புரத்தில் நடத்திய 'நீட்' மாதிரி தேர்வில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர்.தமிழகம், புதுச்சேரியில் வரும் மே 5ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. அதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவை நினைவாக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ், டைம் நிறுவனத்துடன் இணைந்து 'நீட்' மாதிரி தேர்வை விழுப்புரத்தில் நேற்று நடத்தியது.செஞ்சி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்வு நடந்தது. தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 1:20 மணி வரை நடந்தது.

கட்டுப்பாட்டுடன் நடந்த தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில், டாக்டர் கனவில் உள்ள மாணவர்கள் பலர் முன்பதிவு செய்து, தேர்வில் பங்கேற்றனர். இது, மாதிரி 'நீட்' தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போல், விரிவான ஏற்பாடுகளுடன், மிக கட்டுப்பாட்டுடன் நடந்தது.தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும், மாணவர்கள் நலன் கருதி, தேர்வில் பின்பற்றப்பட்டது. நீட் தேர்வில் பங்கேற்பதற்கான அனுபவத்தை, மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் பெறும் வகையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மாணவ, மாணவியர் ஆர்வம்

தேர்வு எழுத முன்பதிவு செய்திருந்த மாணவ, மாணவியர்கள் காலை 8:00 மணி முதல் தேர்வு மையத்திற்கு வருகை தந்தனர். 9:00 முதல் 9:45 மணி வரை, தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மாதிரி தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை வகுத்துள்ள கட்டுப்பாடுகள்படி, முழு கை சட்டை, மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சோதனைக்குப் பின் அனுமதி

தேர்வறைக்குச் செல்வதற்கு முன், தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். அச்சிட்ட தாள்கள், குறிப்புகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ரைட்டிங் பேட், பென் டிரைவ், ரப்பர், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், ஸ்கேனர் போன்றவை இருக்கிறதா எனவும், மொபைல் போன், ப்ளூ டூத், இயர் போன், மைக்ரோபோன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட தொடர்பு கருவிகள் இருக்கிறதா எனவும் சோதித்து, அனுமதிக்கப்பட்டனர்.சிலர் ஹேர்பேண்ட், தொப்பி, வாட்சு, பிரேஸ்லெட், காதணி, மூக்குத்தி போன்றவை அணிந்து வந்தவர்களிடம் இருந்து வாயில் பகுதியிலேயே கழற்றி பெறப்பட்டது. மையத்துக்குள் சாதாரண செருப்பு அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. ஷூ அனுமதிக்கப்படவில்லை.

தமிழ், ஆங்கில வழியில் தேர்வு

இந்த நுழைவுத் தேர்வு, 720 மதிப்பெண்கள் கொண்டதாக இருந்தது. இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களிலிருந்து, தலா 50 கேள்விகள் என, மொத்தம் 200 கேள்விகள், கேட்கப்பட்டிருந்தது.இதில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களும் வழங்கப்படும் விதத்தில், தேர்வு அமைக்கப்பட்டது. சரியாக பதில் அளித்தால் 4 மதிப்பெண்களும், தவறாக பதிலளித்தால் 1 மதிப்பெண்ணும் குறைக்கப்படும் என்ற விதிகள்படி தேர்வு நடந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வினாத்தாள்கள் தனித்தனியாக வழங்கப்பட்டது.காலை சரியாக 10:00 மணிக்கு, வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கி தேர்வு துவங்கியது. பால்பாயிண்ட் பேனாவால் மாணவர்கள் விடைகளை குறித்தனர். தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானுார், திருக்கோவிலுார், செஞ்சி, கண்டமங்கலம், விழுப்புரம் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

தேர்வுக்கு 421 மாணவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில் 329 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பதிவு செய்யப்பட்டபடி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு, தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1:20 மணிக்கு தேர்வு நிறைவடைந்தது.இந்த மாதிரி தேர்வில், மாவட்டத்தில் இருந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களும், மாணவிகளும் அதிகளவில் பங்கேற்றனர்.'நீட்' தேர்வு குறித்த அச்சம், குழப்ப நிலையில் இருந்த மாணவர்கள், இந்த மாதிரி தேர்வு மூலம் தேர்வு குறித்த புரிதல் ஏற்பட்டு, உற்சாகமடைந்தனர். அதேபோல், இந்த மாதிரி தேர்வு மூலம், 'நீட்' தேர்வுக்கு, அவர்கள் எந்தளவிற்கு தயாராகியுள்ளனர் என்ற புரிதலும் ஏற்பட்டது.

சுய பரிசோதனை

மதிப்பெண் பெறும் நோக்கத்தில் மனப்பாடம் செய்து படிப்பது நீட் தேர்வுக்கு உதவாது என்பதையும், பாடங்கள் நிறைய கருத்துகள், சூத்திரங்கள், சமன்பாடுகளை ஆழ்ந்து, புரிந்து படிப்பதோடு, அதனை தினசரி எழுதிப் பழக வேண்டும் என்பதையும், மாணவர்கள் தெரிந்து கொண்டனர். மாணவர்கள், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பாக இந்த மாதிரி தேர்வு அமைந்தது.மாணவர்கள் கூறுகையில், 'தினமலர்' நடத்திய இந்த மாதிரி தேர்வு, உண்மையான 'நீட்' தேர்வு எழுதுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. எளிமையாக தேர்வு இருந்தது. மாணவர் நலனில் அக்கறையோடு செயல்படும் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. அச்சம் நீங்கியதால், இனி, தேசிய தேர்வு முகமையின் 'நீட்' தேர்வை, தைரியமாக எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையுள்ளது' என தெரிவித்தனர்.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தினமலருடன், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகமும், தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை