விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மகன் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம், ரகமத் கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடசுப்ரமணிய செல்வம், 54; இவர், புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார்.கடந்த மார்ச் 5ம் தேதி, கடையை மூடிவிட்டு பைக்கில் விழுப்புரம் சென்றார். வழியில் கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் ஏரிக்கரை அருகே பின்னால் ஆட்டோவில் வந்த 2 பேர், வெங்கடசுப்ரமணிய செல்வத்தை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 1,000 ரூபாயை வழிப்பறி செய்தனர். மேலும், சில நாட்களில், அவரை தொடர்பு கொண்டு 30 லட்சம் ரூபாய் கேட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வந்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம், கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருணாச்சலம், 28; அதே பகுதி மடுகரை சாலையை சேர்ந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகன்நாதன் மகன் வாஞ்சிநாதன், 37; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடிகளான இருவர் மீதும் புதுச்சேரி, தமிழக பகுதியில் வழிப்பறி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.இதனையடுத்து, அருணாச்சலம், வாஞ்சிநாதன் ஆகிய இருவரையும், கண்டமங்கலம் போலீசார், நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கினர்.