விழுப்புரம் தாலுகாவில் தனிப்பிரிவு ஏட்டுகள் பணிகளை சரிவர செய்யாததால் தலைமைக்கு தகவல் கூற முடியாமல் போலீசார் புலம்புகின்றனர்.விழுப்புரம் மாவட்ட காவல் துறையில், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் எல்லைகளில் உள்ள குற்றங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் பற்றி தகவல்களை முன்கூட்டியே எஸ்.பி., அலுவலகத்திற்கு தெரியப்படுத்த தனிப்பிரிவு ஏட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், விழுப்புரம் தாலுகாவிற்கு உட்பட்டுள்ள தாலுகா, டவுன், மேற்கு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள தனிப்பிரிவு ஏட்டுகள் கடந்த சில மாதங்களாகவே தங்களின் எல்லைக்குள் நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே தலைமையிடமான எஸ்.பி., அலுவலகத்திற்கு கூறாமல் சுணக்கம் காட்டி வருகின்றனர்.இந்த தனிப்பிரிவு ஏட்டுகள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு தாமதமாக செல்வதோடு, அதற்குள் தகவலை அங்கு செல்லும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.பி., அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். இதனால், இந்த தனிப்பிரிவு ஏட்டுகள் பணிகளில் சரிவர ஈடுபடாமல், தங்களின் சொந்த பணிகளிலே அதிக நாட்டம் காட்டுவதால், தகவலை முன்கூட்டி அவர்களிடம் வாங்க முடியாமல், எஸ்.பி., அலுவலகத்தில் தகவல் பெற்று எஸ்.பி.,யிடம் கூறும் போலீசார் புலம்பி வருகின்றனர்.
தனிப்பிரிவால் புலம்பும் காக்கி
லோக்சபா தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீஸ்காரர்கள் வரை அனைவரையும், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள தனிப்பிரிவு ஏட்டுகளை இடமாற்றம் செய்யாததால், இவர்கள் தங்கள் எல்லையில் உள்ள இடங்களை நன்றாக தெரிந்து வைத்து கொண்டு, பணிக்கு செல்லாமல் தங்களின் செல்வாக்கு மூலம் தகவலை பெற்று கொண்டு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டவர்களை மிரட்டி தங்கள் காரியத்தை கச்சிதமாக சாதித்து வருகின்றனர்.