| ADDED : ஜூலை 21, 2024 05:36 AM
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி அடுத்த வி.கூட்ரோடு அருகே உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் முன்னாள் தலைவர் விஜயகுமார் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான வி.கூட்ரோடு அருகே கடந்த 2021ம் ஆண்டு ரூ.1,100 கோடி மதிப்பில் 1,102 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முன்னாள் முதல்வர் பழனி சாமி துவக்கி வைத்தார்.இந்த மையத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடை வளர்ச்சிக்காக தினமும் காவிரி ஆற்றிலிருந்து 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதேபோல் கால்நடை பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்காக 100 கட்டடங்கள், 2 ஏக்கர் பரப்பிலான ஆராய்ச்சிக் கூடம், இறைச்சி கூடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.இதனால் இந்த மையத்தில் கால்நடை மருத்துவக் கல்லுாரி தவிர பிற பகுதிகள் இருள் சூழ்ந்து, முட்புதர்கள் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.மேலும், ஆவின் சார்பில் ரூ. 100 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட பால் உற்பத்தி கூடங்கள், பால் உப பொருட்கள் உற்பத்தி நிலையங்களும் வீணாகி வருகிறது.இதனை செயல்படுத்தினால், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், கடலுார், சேலம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேவையான பால் மற்றும் உபபொருட்கள் முழுமையாக வழங்கலாம்.எனவே இப்பகுதி விவசாயிகளின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள, கால்நடை ஆராய்ச்சி மையத்தை முழுமையாக செயல்படுத்தி, அதனால் கிடைக்கும் பயன்களை தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.