லோக்சபா தேர்தலில், வட மாவட்டத்தில் செல்வாக்காக உள்ள பா.ம.க.,வை தங்கள் பக்கம் இழுப்பதற்கு, அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவின் பேரில், திண்டிவனத்தை சேர்ந்த மாஜி அ.தி.மு.க.,அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.,நிறுவனர் ராமதாசை, மாஜி அமைச்சர் நான்கு தடவை ரகசியமாக சந்தித்து அ.தி.மு.க.,உடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தார்.இதன் தொடர்ச்சியாக பா.ஜ.,வை தவிர்த்து, அ.தி.மு.க.,உடன் கூட்டணி அமைப்பதற்கு ராமதாஸ் முழு ஒப்புதல் கொடுக்கும் அளவிற்கு வந்துவிட்டார். திடீரென்று பா.ஜ.,மேலிடம், பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக, கடைசி கட்டத்தில் பா.ம.க.,நிறுவனர் திசைமாறி, பா.ஜ.,உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்டார். பா.ம.க.,கூட்டணி மாறியதால் மாஜி அமைச்சர் சண்முகம் மற்றும் கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி கடும் அப்செட் ஆகினர். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வினர் தினகரன், ஓ.பி.எஸ். மற்றும் பா.ஜ.மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க.,சவுமியா அன்புமணி ஆகிய நான்கு பேர் தோற்றாலே அ.தி.மு.க.,விற்கு மாபெரும் வெற்றி என்று சமூக வளை தலங்களில் செய்தியை பரவவிட்டனர். கடைசியில் பா.ம.க.,போட்டியிட்ட 10 இடங்களிலும் தோல்வியை தழுவியதுஇதில் நமக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்று அ.தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். கடைசியில் தேர்தல் முடிவில் அ.தி.மு.க., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. அதே போல் அ.தி.மு.க.வினர் தோற்க வேண்டும் என்று எதிர்பார்த்த தினகரன், ஓ.பி.எஸ்.,அண்ணாமலை, சவுமியா அன்புமணி ஆகிய நால்வரும் தோல்வியடைந்தது அ.தி.மு.க.,வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.-நமது நிருபர்-