விழுப்புரம்,:அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், விழுப்புரம் முன்னாள் ஆர்.டி.ஓ., நேற்று சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், பூத்துறையில் உள்ள குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது, கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் 46 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். நேற்று 47வது சாட்சியாக, சம்பவத்தின் போது விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்த தற்போது தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி (டி.ஆர்.ஓ.,) அலுவலராக உள்ள பிரியா, ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, அவர், 2011 முதல் 2012-ம் ஆண்டு வரை விழுப்புரம் கோட்டாட்சியராக பணியாற்றினேன், அப்போது பூத்துறை செம்மண் குவாரியில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து, எனது உத்தரவின் படி, வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் கூட்டு புலத்தணிக்கை செய்து எனக்கு அறிக்கை அனுப்பினர்.அதன் படி, விளக்கம் கேட்டு கடந்த 19.12.2011ல் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் கால அவகாசம் கோரினர். ஆனால், கால அவகாசம் முடிந்தும் பதில் வழங்காததால், மீண்டும் மூவருக்கும் 2ம் முறையாக கடந்த 19.4.2012ல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர்கள், கூட்டு புலத்தணிக்கை செய்த ஆவணங்களின் நகல்களை கோரினர்.உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று, ஆவணங்களை ஒப்படைக்க இருந்த சூழலில், தான் இடமாறுதலில் சென்றுவிட்டதாக சாட்சியம் அளித்தார். தொடர்ந்த அவரிடம், பொன்முடி உள்ளிட்ட எதிர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.சாட்சி விசாரணையை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, அடுத்த சாட்சி விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என அறிவித்தார்.