ரூ.20 லட்சத்துடன் தலைமறைவான சிட்பண்ட் நிறுவன மேலாளர் கைது விழுப்புரம் போலீசார் அதிரடி
விழுப்புரம் : விழுப்புரத்தில் ரூ.20.89 லட்சம் பணத்துடன் தலைமறைவான, சிட்பண்ட் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் சாலாமேடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் பிரபாகரன், 32; இவர், விழுப்புரம் கே.கே. ரோடில் உள்ள தனியார் டிஜிட்டல் டிசைனர் மற்றும் சிட்பண்ட் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார்.கடந்த 2ம் தேதி இரவு, நிறுவன உரிமையாளரான விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த தமிழ்செல்வம் கொடுத்த சீட்டு பணம் ரூ.20 லட்சத்து 89 ஆயிரத்தை, பெற்றுக் கொண்டு, மாம்பழப்பட்டு சாலையில் உள்ள கிளை நிறுவனத்தில் கொடுப்பதற்காக பைக்கில் சென்றார். ஆனால், கிளை அலுவலகத்தில் பணத்தை ஒப்படைக்காமல் தலைமறைவானார். இதுகுறித்து பிரபாகரனின் மனைவி கயல்விழி, சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் தமிழ்செல்வம் ஆகிய இருவரும், விழுப்புரம் மேற்கு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர்.இந்நிலையில், நேற்று காலை விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்த, பிரபாகரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், பிரபாகரன், சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார், அதில், அவருக்கு ரூ.30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள், அதனை திருப்பிக்கேட்டு பிரபாகரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால், தமிழ்செல்வம் கொடுத்த ரூ.20 லட்சத்து 89 ஆயிரத்துடன் பணத்துடன், காரில் காரைக்கால், சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விடுதியில் அறை எடுத்து தங்கி, ஆடம்பரமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளார்.இந்நிலையில், தனது கடனை அடைப்பது சிரமம் என்பதை உணர்ந்த அவர், குடும்பத்தோடு தலைமறைவாகி விடலாம் என திட்டமிட்டு, விழுப்புரம் திரும்பியபோது பிடிபட்டது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து, போலீசார் பிரபாகரனை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.