உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியிலுள்ள திருவண்ணாமலை சாலையை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை தேவை

செஞ்சியிலுள்ள திருவண்ணாமலை சாலையை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை தேவை

செஞ்சி: செஞ்சியில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக செஞ்சி நகரம் உள்ளது. செஞ்சி நகரின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 77 யும் விரிவு படுத்தி இரு வழி சாலையாக அமைத்துள்ளனர். இதனால் செஞ்சி நகரின் வழியாக செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரூ, மும்பை, ஐதராபாத் செல்லும் வாகனங்களும், சென்னையில் இருந்து திருவண்ணாமலை, சேலம், ஈரோடு மாவட்டத்திற்கும் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. திருவண்ணாமலைக்கு பவுர்ணமியில் மட்டும் கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் தற்போது பிரதோஷ நாட்களிலும் அதிக அளவில் கிரிவலம் செல்கின்றனர். செஞ்சியில் பைபாஸ் இருந்தாலும் பாதியளவு வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக செல்கின்றன. குறிப்பாக பயணிகள் வாகனங்கள் துாரம் குறைவாக இருப்பதாலும், டீ, காபி மற்றும் தின்பண்டங்கள், ஓட்டல்களில் சாப்பிடவும் செஞ்சி நகரின் வழியாக செல்கின்றனர். இந்த வாகனங்கள் திண்டிவனம் சாலை மற்றும் திருவண்ணாமலை சாலையை கடந்து செல்ல வேண்டும். திண்டிவனம் சாலையில் வர்த்தக நிறுவனங்கள் குறைவாக இருப்பதால் இங்கு போக்குவரத்து சிக்கல் இல்லை. திருவண்ணாமலை சாலையில் 300 மீட்டருக்குள் வங்கிகள், திருமண மடண்டங்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் என எப்போதும் நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. தற்போது திருவண்ணாமலை சாலையில் விரிவாக்கத்திற்கு இடையூராக 11 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களை சாலை ஓரம் நகர்த்துவதற்கு இடையூறாக 10 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அகற்றாமல் மின்கம்பங்களை நகர்த்த முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழியுடன் சிறிய சாலையாக இருந்த போது மின் கம்பங்களை அமைத்தனர். மின் கம்பங்களுக்கு அடுத்து தார் சாலையில் இருந்து 40 அடிவரை தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யாமல் இருப்பதால் அந்த இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர். டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்களை சாலை ஓரம் நகர்த்த மரங்களை அப்புறப்படுத்தி தருமாறு பல ஆண்டுகளாக மின் வாரியத்தினர் கேட்டு வருகின்றனர். மரங்களை அப்புறப்படுத்தினால் உடனடியாக புதிதாக புதிய மின் கம்பங்கள் அமைக்க 11 மின் கம்பங்களை திருவண்ணாமலை சாலையில் பல மாதங்களாக தயார் நிலையில் வைத்துள்ளனர். எனவே புதிய மின் கம்பங்கள் அமைக்கவும், சாலையை விரிவாக்கம் செய்யவும் நகாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ