விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தும், 7 தொகுதிகளுக்கான 2,356 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து, தேர்தலன்று பயன்படுத்த உள்ள 7 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று காலை துவங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி மேற்பார்வையில், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மின்னனு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, லாரிகளில் அனுப்பி வைத்தனர்.செஞ்சி தொகுதியின் 304 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 364 பேலட் யூனிட், 364 கன்ட்ரோல் யூனிட், 395 வி.வி.,பேட் என மொத்தம் 1,123 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெட்டிகளில் வைத்து, சீல் வைத்து, லாரியில் செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பினர்.இதே போல், மயிலம் தொகுதியின் 267 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 320 பேலட் யூனிட், 320 கன்ட்ரோல் யூனிட், 347 வி.வி.,பேட் என 987 இயந்திரங்கள், மயிலம் தாலுகா அலுவலகத்திற்கும்; திண்டிவனம் (தனி) தொகுதியின் 267 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, 320 பேலட் யூனிட், 320 கன்ட்ரோல் யூனிட், 347 வி.வி.,பேட் என 987 மின்னணு இயந்திரங்கள் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.வானுார் (தனி) தொகுதியின் 278 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தலா 333 கன்ட்ரோல் மற்றும் பேலட் யூனிட்களும், 367 வி.வி., பேட் என 1,027 இயந்திரங்கள் வானுார் தாலுகா அலுவலகத்திற்கும், விழுப்புரம் தொகுதியின் 289 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, தலா 346 கன்ட்ரோல் மற்றும் பேலட் யூனிட்கள், 375 வி.வி., பேட் என 1,067 இயந்திரங்கள் விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 ஓட்டுச்சாவடிகளுக்கு தலா 330 பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட்களும், 357 வி.வி. பேட் என மொத்தம் 1,017 இயந்திரங்கள், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கும், திருக்கோவிலுார் தொகுதியின் 286 ஓட்டுச்சாவடிகளுக்கு தலா 343 பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட்கள், வி.வி., பேட் கருவிகள் 371 என 1,057 இயந்திரங்கள் முகையூர் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.மொத்தம் உள்ள 7 தொகுதிகளின் 1,966 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, தலா 2,356 பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட்களும், 2,553 வி.வி., பேட் கருவிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பு வைக்கப்பட்டது.