| ADDED : ஜன 01, 2024 12:22 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் மாவட்டத்தில் 2,548 சாலை விபத்துகளில் 496 பேர் இறந்துள்ளனர். 2,052 பேர் காயமடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை, திருச்சி பைபாஸ் சாலை மட்டுமின்றி நகர்புறங்களில் உள்ள சாலைகளும் வாகன போக்குவரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாக உள்ளது.இந்த சாலைகளில் நகர பகுதிகளில் அதிவேகமாக செல்வதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.இதையொட்டி, மாவட்ட காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை சார்பில் அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் சாலைகளின் முக்கிய இடங்களில் விளம்பரம், சுவர் சித்திரங்களை தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இது மட்டுமின்றி மாவட்டத்தில் விபத்துகள் அதிகமாக நடக்கும் 20க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து, தீவிரமாக கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அது மட்டுமின்றி சோதனைச் சாவடி மூலம் மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரை கண்டறிந்து வழக்குப் பதிந்து வாகனத்தை பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.போலீசாரும், அதிகாரிகளும் என்னதான் விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும், அதன் காரணமாக ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த 2,503 சாலை விபத்துகளில் 564 பேர் இறந்தனர். 1,939 பேர் காயமடைந்துள்ளனர். 2023ம் ஆண்டில் மாவட்டத்தில் 2,548 சாலை விபத்துகளில் 496 பேர் இறந்துள்ளனர். 2,052 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்துகளையும், அதனால் ஏற்படும் இறப்புகளை தவிர்க்கவும் தொடர்ந்து, போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.