| ADDED : மே 09, 2024 04:35 AM
செஞ்சி: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு அதிக நெல் வரத்து உள்ளது. இங்கு நெல் ஏலம் நடத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. தீவிர நெல் அறுவடை நாட்களில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த நெல் மூட்டைகளை வாங்குவதற்கு வியாபாரிகள் தயாராக இருந்தாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதில் மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.இதனிடையே கமிட்டிக்கு நேற்று அதிகாலை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 7 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த மூட்டைகளை குடோனில் வைத்து ஏலம் நடத்த இடமில்லாமல் 4 ஆயிரம் மூட்டைகளை திறந்த வெளியில் வைத்திருந்தனர்.அதே இடத்தில் வியாபாரிகள் கடந்த வாரம் வாங்கிய 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகளையும் அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய கோடை மழை 1 மணி நேரம் வரை நீடித்தது. இதில் 6 ஆயிரம் நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து பாதித்தன. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிப்படைந்தனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் சீசன் நேரத்தில் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடமில்லாமல் கமிட்டியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்துவதும், நெல் கொண்டு வர வேண்டாம் என அறிவிப்பு செய்வதும், நெல் கொண்டு வந்த விவசாயிகளை இரண்டு, மூன்று நாட்களுக்கு அலை கழிப்பதும் தொடர் கதையாக உள்ளது. திறந்த வெளியில், கடும் வெயிலில் மூட்டை மாற்ற முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இங்கு வரும் விவசாயிகள் தங்களுக்கான உரிமைகளையும், தேவைகளையும் ரோட்டுக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டு பெறும் நிலை உள்ளது. இப்பிரச்னைக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய மார்க்கெட் கமிட்டி நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பிரச்னை வரும் போது இருக்கும் வசதிகளை கொண்டு சமாளிக்கும் படி அதிகாரிகள் நிர்பந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்து நெல் வரத்து குறைந்து வருவாதல், செஞ்சி மார்க்கெட் கமிட்டி தமிழகத்தில் நெல் கொள்முதலில் முதலிடம் என்ற பெருமையை மெல்ல இழந்து வருகின்றது.இதற்கு நிரந்தர தீர்வாக மார்க்கெட் கமிட்டியை விரிவு படுத்தவும், திறந்த வெளி களத்தின் மீது மேல் கூரை அமைக்கவும், மழை, வெயில் பாதிப்பின்றி மார்க்கெட் கமிட்டி நடக்கவும் மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.