விழுப்புரம் மாவட்டத்தில் 688 கிராமங்கள் பாதிப்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 688 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மயிலத்தில் 51 செ.மீ., மழை பெய்துள்ளது.தொடர்ச்சியாக 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டக்குப்பம் நகரில் மக்கள் மீட்கப்பட்டு 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், கடலோர மாவட்டங்களான வானுார், மரக்காணத்தில் மீட்பு பணிகள் நடந்து, நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். புயல் காற்றால் 27 மரங்கள் விழுந்தன. அவைகள் அகற்றப்பட்டன. 125 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. பசுக்கள் 6, கன்று 4, ஆடுகள் 3, கோழிகள் 5,500 என 5,513 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 11 வீடுகள் சேதமடைந்தன. 5 பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மீட்பு பணிகள் நடக்கிறது. மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.மாவட்டத்தில் 34 முகாம்கள் அமைத்து, 1,881 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதித்த 66 பகுதிகளில், மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருவதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 1,000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பருவத்துக்கான நெல் பயிர்கள் நேற்று பெய்த ஒரு நாள் கன மழையில் மூழ்கின.