| ADDED : ஜன 05, 2024 12:17 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியதில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கிரேன் ஏற்றிக் கொண்டு கனரக லாரி திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காலை 5:25 மணியளவில் ஜானகிபுரம் அருகே திடீரென நிலை தடுமாறி முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது.நிலை தடுமாறிய டேங்கர் லாரி, முன்னால் பயணிகளுடன் திருச்சி சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த அரசு பஸ், அதற்கு முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது.தொடர்ந்து 3 லாரிகள், பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில், அரசு பஸ் முற்றிலும் சேதமடைந்தது.இந்த விபத்தில் திருச்சி மணிகண்டநல்லுார் கலியமூர்த்தி, 48; ஈச்சம்பட்டி கலியன், 32; துறையூர் பவுல்ராஜ், 38; திருவண்ணாமலை, செம்மவாடி தங்கராஜ் மகன் விமல்ராஜ், 22; மற்றும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.