70 ஆண்டுகளுக்கு பின் ஏரிக்கு நீர்வரத்து விவசாயிகள் மலர் துாவி வரவேற்பு ரூ.5 கோடிக்கு வாய்க்கால்களை துார்வாரியதால் பலன்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிக்கு 70 ஆண்டுகளுக்கு பின்பு நீர் வரந்துள்ளதால் விவசாயிகள் பூ துாவி வரவேற்றனர்.சாத்தனுார், அணையிலிருந்து நீர் திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆறு ராகவன் வாய்க்கால் வழியாக சென்று பின்னர் அவ்வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் ஆமூரான் வாய்க்கால் வழியாக திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள டி.கொளத்துார், ஆமூர், ஆமூர் குப்பம், துலக்கம்பட்டு உட்பட 8 ஏரிகள் நிரம்புவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக ஏரிக்கு நீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள் துார்ந்து தண்ணீர் செல்ல முடியாமல் இருந்து வந்தது. அப்படியே வாய்க்காலில் தண்ணீர் சென்றால் முதலில் உள்ள சில ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் சென்று அதோடு நின்றுவிடும். இதனால் ஏரி வாய்க்காலை துார்வாரக்கோரி நீர்பாசன சங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்தாண்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராகவன் வாய்க்கால் மற்றும் ஏரி கிளை வாய்க்கால்கள் துார் வாரப்பட்டன. அதன்காரணமாக இந்தாண்டு தண்ணீர் தங்கு தடையின்றி 8 ஏரிகளுக்கும் வந்தடைந்தது. இதனை வரவேற்கும் விதமாக துலக்கம்பட்டு அக்கிராம விவசாயிகள் பூக்களை கொட்டி தண்ணீரை வரவேற்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.