உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பயனாளிகளுக்கு வழங்கிய தொகை திரும்ப பெற தீவிரம்: 13 ஆயிரம் பேர் வீடு கட்டாததால் அதிரடி நடவடிக்கை

பயனாளிகளுக்கு வழங்கிய தொகை திரும்ப பெற தீவிரம்: 13 ஆயிரம் பேர் வீடு கட்டாததால் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி பெற்ற 13 ஆயிரம் பேர் பணியை துவங்கவில்லை. இதனால், பயனாளிகளுக்கு வழங்கிய தொகையை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2016-17 முதல் 2021-22 ஆண்டு வரை மொத்தம் 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சமூக, பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு மற்றும் ஆவாஸ் பிளஸ் கணக்கெடுப்பு பட்டியல்களின் அடிப்படையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ், விழுப்புரம் மாவட்டத்திற்கு 70 ஆயிரம் வீடுகள் அனுமதி வழங்கப்பட்டது.ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் , மொத்தம் ரூ. ஆயிரத்து 194 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கீடு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, 2024-25ம் நிதி ஆண்டில், 5 ஆயிரத்து 314 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏற்கனவே 70 ஆயிரம் வீடுகள் வழங்க அனுமதி வழங்கியதில், 52 ஆயிரத்து 427 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும். 4 ஆயிரத்து 140 வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட 13 ஆயிரத்து 433 பயனாளிகள் வீடு கட்டும் பணியை துவக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, வீடு கட்டும் பணியை மேற்கொள்ள தவறியதற்கான காரணம் குறித்து ஒன்றிய வாரியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.வானுார் ஒன்றியத்தில், 2,556 பேர், மரக்காணம் 2,037 பேர், திருவெண்ணெய் நல்லுார் 1,656 பேர், கண்டமங்கலம் 1,621 பேர், கோலியனுார் 1,051 பேர் உட்பட 13 ஆயிரத்து 433 பயனாளிகள் கட்டுமான பணியை துவங்காதது தெரிய வந்துள்ளது.வீடு கட்டும் பணியை துவங்காத பயனாளிகளிடம், திட்டத்தின் படி முதற்கட்டமாக வழங்கிய தலா ரூ.26 ஆயிரம் தொகையை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை