வருவாய் துறையினருடன் இணக்கம்... செங்கல் சூளைகளுக்கு ஏரி மண் விற்பனை
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, ஏரியை மேம்படுத்தும் மராமத்து பணி சில மாதங்களாக மாவட்டம் முழுதும் நடந்து வருகிறது. இதில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் ஆளும் கட்சியினர் ஏரி கரைகளை பலப்படுத்தி ஓரளவிற்கு வேலை செய்துள்ளனர். பெரும்பாலான ஏரிகளில் 2,000 முதல் 3,000 லோடு வரை ஏரி மண்ணை செங்கல் சூளைகளுக்கும், தனி நபர்களின் வீடு, கடைகளுக்கும் விற்பனை செய்துள்ளனர். ஒவ்வொரு செங்கல் சூளையிலும் அடுத்த 6 மாதத்திற்கு தேவையான மண்ணை நிரப்பி விட்டனர். சில இடங்களில் ஏரி மண் விற்பனை செய்தவர்கள் வருவாய்த் துறையினருடன் இணக்கமாக நடந்து கொண்டு பிரச்னை வராமல் பார்த்துக் கொண்டனர். பிரச்னை ஏற்பட்ட இடங்களில் ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலையிட்டு மண் அடிப்பதை தடுக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஏரி மராமத்து வேலை செய்த ஆளும் கட்சி நிர்வாகிகள் பல லட்சங்களை சம்பாதித்து விட்டனர். அதே ஊரில் எந்த வருவாயும் கிடைக்காத மற்ற நிர்வாகிகள் இதில் கடுப்பாகி எதிர் கட்சி போல செயல்பட்டு வருவாய்த் துறையினரிடம் தொடர்ந்து புகார் செய்தனர். அதிலும் எந்த பலனும் இல்லாததால் மாவட்ட நிர்வாகிகளிடம் நேரடியாக பிரச்னை எழுப்பினர். இதன் காரணமாக அதிருப்தியாளர்களுக்கு சில ஆயிரங்களைக் கொடுத்து சமரசம் செய்துள்ளனர். இதிலும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பங்கு அளிக்காமல் பிரச்னை செய்தவர்களை மட்டும் சரி கட்டியுள்ளனர். இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியினர் ஏரியில் மண் எடுத்துச் சென்று விற்பனை செய்த போது தடுக்க முடியாமல் வேடிக் கை பார்த்த வருவாய்த் துறையினர், நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளிடம் கெடுபிடி காட்டுகின்றனர். ஒரு சில இடங்களில் மண் எடுக்க உத்தரவு இருந்தும் விவசாயிகளை மண் எடுக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.