விழுப்புரம், : அ.ம.மு.க., விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் தினகரன் கலந்து கொண்டு பேசினார். விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில துணை பொது செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் முத்து வரவேற்றார். அமைப்பு செயலாளர்கள் கணபதி, கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகி மணியன், வடக்கு செயலாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் தினகரன் பேசியதாவது: சிலர் நான் தனிமரம் என கூறுகின்றனர். புதிய சின்னமான குக்கர் சின்னத்தில் ஜெ., தொகுதியில் வெற்றி பெற்றேன். என்னால் 2016ம் ஆண்டில் நிதி அமைச்சரான நபர், என்னை பார்த்து தனிமரம் என கூறுகிறார். இரட்டை இலை இல்லாமல் ஒரு சின்னத்தில் இவர்களால் தைரியமாக நிற்கவே முடியாது. இரட்டை இலையை காட்டி நீங்கள் ஏமாற்றி வருகிறீகள். தினகரன் தனிமரம் அல்ல, நீங்கள் எல்லோரும் தனிமரம் ஆகப்போகிறீர்கள்.இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தும் மண்ணைக் கவ்வப் போகிறீர்கள் என உறுதியாக கூறுகிறேன். பணப்பலம் தேர்தலில் எடுபடாது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை கூறி விட்டு, 99 சதவீதத்தை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளனர். அனைத்து இடங்களிலும் நீங்கள் தினகரின் குக்கர் சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும். ஜெ.,வின் ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம்' என கூறினார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) குமரன், கிழக்கு கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் விஸ்வநாதன், மீனவரணி இணை செயலாளர் கருணாநிதி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன், வர்த்தக அணி துணை தலைவர் ராமமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப், நிர்வாகிகள் கார்த்திக், ஆனந்த் சீனிவாசன், இடிமுரசு சேட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகர செயலாளர் அபி அன்சாரி நன்றி கூறினார்.