உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு வாடகைப்படியில் பாரபட்சம் குமுறும் ஆரோவில் போலீசார்

வீட்டு வாடகைப்படியில் பாரபட்சம் குமுறும் ஆரோவில் போலீசார்

காவல் நிலையங்களில் பணியாற்றும் ஒவ்வொரு போலீசாருக்கும் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நகரப்பகுதி, கிராமப்புற காவல் நிலையங்கள் என தனித்தனியாக பிரித்து வாடகைப்படி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள வானுார், கோட்டக்குப்பம், கிளியனுார், மரக்காணம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை மாத வீட்டு வாடகைப்படியாக 2,800 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதே உட்கோட்டத்தில் உள்ள ஆரோவில் போலீசாருக்கு மட்டும் மாத வீட்டு வாடகைப்படியாக 800 மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற காவல் நிலையங்களைக் காட்டிலும் அவர்களுக்கு 2,000 ரூபாய் குறைவாக உள்ளது. கிராமப்புற காவல் நிலையம் என்ற காரணத்தைக் காட்டி, இங்குள்ள போலீசார் பல ஆண்டுகளாக குறைந்த வாடகையே பெற்று வருகின்றனர். ஒரே உட்கோட்டத்தில் இருக்கும் இந்த காவல் நிலையத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டி குறைந்த வாடகைப்படி வழங்குவதால் அங்குள்ள போலீசார் குமுறலில் உள்ளனர். குறிப்பாக மற்ற காவல் நிலையங்களைக் காட்டிலும், சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி அடிக்கடி வெளி மாநில கவர்னர் விசிட், வெளிமாநில நீதிபதிகள் என வி.வி.ஐ.பி.,க்கள் வருகையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆரோவில் போலீசார் எப்போதும் பிசியாகவே காணப்படுவர். சுற்றுலாப் பகுதியில் உள்ள காவல் நிலையம் என்பதால், அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னையும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தங்களுக்கும் மற்ற காவல் நிலையங்களில் வழங்கப்படுவது போன்று கூடுதல் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என ஆரோவில் போலீசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை