செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கட்டஞ்சிமேடு ஈச்சூரை சேர்ந்தவர் யுவராஜ், 40; ஆட்டோ டிரைவர். சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் குடும்பத்துடன் வசித்தார்.நேற்று முன்தினம் காலை, யுவராஜ், மனைவி சத்யா, 35, மகன்கள் பிரகதீஷ்வரன், 11, ஹரிபிரகாஷ், 7, ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல தன் ஆட்டோவில் வந்தார்.வழியில், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்த சத்யாவின் அக்கா அம்மாச்சி, 50, அவரது மகன் ஆகாஷ், 18, ஆகியோரையும் ஆட்டோவில் ஏற்றிச் சென்றார்.கிரிவலம் சுற்றும் போது சென்னை, குன்றத்துாரை சேர்ந்த உறவினர் உத்தரகுமார், 30, அவரது மனைவி பொன்னி, 19, மாமியார் பாஞ்சாலியை சந்தித்தனர்.கிரிவலம் முடிந்ததும் அவர்களையும் ஏற்றிக் கொண்டு, 9 பேர் ஆட்டோவில் புறப்பட்டு நள்ளிரவு, 12:30 மணியளவில் செஞ்சி அடுத்த புலிவந்தி துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்தனர்.அங்கு தரிசனம் செய்து விட்டு, நள்ளிரவு, 1:30 மணியளவில் மீண்டும் கப்பையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அதிகாலை, 2:00 மணியளவில் கப்பை கிராமத்தில் சாலை திருப்பத்தில், 2.5 அடி உயர தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி துாக்கி வீசப்பட்டதில், சாலையோரம் இருந்த விவசாய கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்தது. இதில், 9 பேரும் நீரில் மூழ்கினர். ஆட்டோவிற்கு அடியில் சிக்கிக் கொண்ட பிரகதீஷ்வரன், ஹரிபிரகாஷ் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர்.அவர்கள் உடல்களை செஞ்சி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். யுவராஜ், சத்யா, உத்தரகுமார், பொன்னி, பாஞ்சாலி ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அனந்தபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்த சகோதரர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.