| ADDED : பிப் 21, 2024 10:35 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மின்துறை சார்பில், வீடுகளில் சோலார் பிளாண்ட் பொருத்துவது குறித்து, மின் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.விழுப்புரம் எம்.எஸ்.மகாலில் நடந்த கூட்டத்துக்கு மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை வகித்து, திட்டம் குறித்து விளக்கினார். விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மின்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, வீடுகளில் சோலார் மின் தகடுகள் பொருத்துவது குறித்தும், சோலார் மின்சாரம் உற்பத்தி குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார்.இத்திட்டத்தில், பயன்பெற விரும்பும் பயனாளிகள் “PM SURYA GHAR” என்ற App மூலம் விண்ணப்பிக்கலாம். 1 கி.வாட் சோலார் பிளாண்ட் அமைக்க ரூ.75 ஆயிரம் செலவாகிறது. அதற்கு மத்தியரசு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்குகிறது. வீடுகளில் சோலார் மின் திட்டத்திற்கு மின் இணைப்பு பெற, ஒருமுனை மின்சார இணைப்பிற்கு, மின்துறைக்கு வைப்பு தொகை ஏற்கனவே ரூ.5,192 ஆக இருந்தது. தற்போது, ரூ3,217ஆக குறைக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சார இணைப்பு பெற வைப்பு தொகை முன்பு ரூ.10,590 இருந்தது, தற்போது ரூ.5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால், பொதுமக்களுக்கு சோலார் மின்சாரமும் கிடைக்கும், மின் கட்டணமும் குறையும் என கூட்டத்தில் விளக்கினர். இக்கூட்டத்தில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், இளம் மின் பொறியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.