மக்காச்சோளம் செயல்விளக்க திடல் விவசாயிகளுக்கு அழைப்பு
விழுப்புரம்: மாவட்டத்தில் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு; மாவட்டத்தில், 2024--25ம் ஆண்டு மக்காச்சோளம் பயிர் 1,413 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2025--26ம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மக்காச்சோளம் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு பொதுப்பிரிவினருக்கு 80 ஹெக்டர், ஆதிதிராவிட பிரிவினருக்கு 20 ஹெக்டர் என மொத்தம் 100 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. செயல்விளக்க திடல் அமைக்க ஹெக்டருக்கு 6000 ரூபாய் மானியத்தில் 10 கிலோ மக்காச்சோளம் வீரிய விதை, ஒரு லிட்டர் திரவ உயிர் உரம், மண்வளத்தை மேம்படுத்த 12.5 கிலோ இயற்கை இடுபொருள் மற்றும் 500 மில்லி நானோ யூரியா ஆகிய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முகையூர், காணை, வல்லம், மரக்காணம் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.