மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
விழுப்புரம் : மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு அரசு நலத்திட்டங்கள், சென்று சேர கணக்கெடுப்பு பணி இன்று துவங்க உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு:அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியோடு, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், வீடுகளுக்கு சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து முழு விவரங்கள் கொண்ட சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்க உள்ளனர்.இதற்காக முன்பே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் மூலம் முன் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணி இன்று துவங்கி வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.