விழுப்புரம்: தமிழக அரசின் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி, மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்தொகையில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம், அரசு மானிய உதவி வழங்கப்படும். தமிழகத்தில், தொழில்முனைவோராக ஆர்வமுள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிப்பதுடன், மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், 2025--26 ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்கிட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைப்பு கொண்ட மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். தொழில் திறன் சார் பயிற்சி அளிப்பதுடன், ரூ.10 லட்சம் வரை திட்ட மதிப்பீட்டில், மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் கொண்டு தொழில் புரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். இவர்களுக்கு, தொழில் துவங்குவதற்கு பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதற்கான திட்டத் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் தொழில்கள் எவற்றிலும் ஈடுபடலாம். மேலும், சுற்றுச் சூழலுக்கு இசைவான மக்கும் தன்மையுள்ள நாப்கின்கள் மற்றும் கேரி பேக்குகள் தயாரித்தல், திடக்கழிவுகளிலிருந்து பயன்மிகு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள் துவங்கலாம். இத்துடன், தையல், பானை வனைதல், சிற்பம் வடித்தல் போன்ற கைவினைத் தொழில்கள், இண்டீரியர் டிசைனிங், பேஷன் டிசைன் ஸ்டூடியோ, பிட்னஸ் சென்டர்கள் உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம், கடன் வழங்கப்படும். மகளிர் தொழில்முனைவோரின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள 18 முதல் 55 வயதுக்கு உட்பட்ட, தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கின்ற மகளிர் மற்றும் திருநங்கையர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற அடிப்படைக் கல்வித் தகுதி மற்றும் குடும்ப வருமான வரம்பு எதுவும் கிடையாது. தகுதியும் ஆர்வமும் கொண்டோர் போட்டோ, வயதை உறுதி செய்ய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன் www.msmeonline.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
தொழில் மையத்தை அணுகலாம்
மாவட்டத் தொழில் மையத்தில் தேவையான விவரத்தை விண்ணப்பதாரர்கள் பெறலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும் தேவையும் உள்ள மகளிர் மற்றும் திருநங்கைகள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். திட்டம் குறித்த தகவல்களைப் பெறவும், விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி, தேவையான விபரங்களை பெறலாம். கூடுதல் விபரங்களைப் பெற்றிட, தொலைபேசி எண் : 04146-223616, மொபைல் எண்கள்: 8925534035, 9443728015 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.